Saturday, November 6, 2010

விளை நிலங்கள் விலை நிலமாவதா?

 இன்றைய‌ வானுய‌ர் க‌ட்ட‌ட‌ங்க‌ளைப் பார்க்கும்போது,ஒரு ப‌க்க‌ம் ம‌ன‌தில் ம‌கிழ்வு தோன்றினாலும்,
 ம‌றுபுற‌ம் அத‌ன‌டியில் புதையுண்டிருக்கும் ஆயிர‌மாயிர‌ம் ஏக்க‌ர் விளை நில‌ங்க‌ள் நெஞ்சைப் ப‌தைக்க வைக்கின்றன.சில‌ ப‌த்தாண்டுக‌ளுக்கு முன் இருந்த‌ விவ‌சாய‌ நில‌ங்க‌ளில் 60%க்கும் அதிக‌மான‌வை வீட்டு நில‌ங்க‌ளாக‌ மாறிவிட்டன‌.ப‌ல‌ விவ‌சாயிக‌ள் விவ‌சாய‌த்தை விட்டு உப‌ தொழில்க‌ளைத் தேட‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌ர்.அத‌ற்கான‌ மிக‌ப் பெரும் கார‌ண‌ம் விவ‌சாய‌த் தொழிலாள‌ர்க‌ள் ப‌ற்றாக்குறை,விளை பொருட்க‌ளை சேமிப்ப‌தில் இருக்கும் பிர‌ச்சினைகள்,நிலத்தை வீட்டு மனையாக்குவதால் கிடைக்கும் பெரும் லாபம்.விவசாயிகள் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது வீட்டு நிலன்களாக்குவது பயன் தரும் செயல் தான்.ஆனால் ஒரு சமுதாயத்தின்,ஒரு நாட்டின் எதிர்காலம் இச்செயல் மூலம் பாழாகிறது.தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.இதே நிலை நீடித்தால், நம் தாய்த்திரு நாட்டிற்கே உணவுப் பஞ்சம் வரும் என்பது திண்ணம்.இதை எல்லாம் சரி செய்ய வேண்டியது அரசாங்க‌த்தின் கடமை என்றும்,அரசு ஏதும் செய்யவில்லை என்
ரும் குறை கூறுவது மட்டும் தீர்வாகாது.இதிலிருந்து தப்பிக்க நாம் வழிகளைக் கண்டாக வேண்டும்.சில மாற்றங்களைக் கொண்டுவருவதால் மிகப் பெரும் பசுமைப் புரட்சியைக் கொண்டு வரலாம்.
1.நிலத்தில் போட்டால் அழியாது எனக்கூறி ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி தரிசாகப் போட்டு,அதனை ஒரு முதலீடாக்கும் எண்ணத்தைக் குறைக்க வேண்டும்.
2.சம்பாதிக்கும் நகர இளைஞ்ர்கள் விவசாயிகளுக்கு உதவ முன் வர வேண்டும்.அவர்களால் உடல் உழைப்பைத் தர முடியாவிட்டாலும்,கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் பொருளாதார உதவிகளைச் செய்ய முன்வரலாம்.
3.விவசாய வேலை செய்பவர்கள், குறைந்தவிட்ட‌ காரணத்தால் விவசாயிகள் எந்திரங்களின் உதவியை நாடும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
4.உழவர் சந்தை போன்ற அமைப்புகளை,குடியிருப்பு சங்கங்கள் அருகிலுள்ள கிராம விவ‌சாயிக‌ளின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்த முனையலாம்.சிறந்த பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதோடு,விவசாயிகளுக்கும் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கும்
5.நவீன விவசாய உத்திகளை விவசாயிகளுக்கு கற்றுத் தருவதன் மூலம் குறைந்த செலவில், நிறைந்த மகசூலையும்,லாபத்தையும் பெறலாம்.
அடுத்த தலைமுறைக்கு அன்னை பூமியை அளிக்கப் போகிறோமா அல்லது வெறும் மண்ணைத் தரப் போகிறோமா என முடிவு செய்வது நம் கையில்தான் உள்ளது

புதிய சிறகுகள்-விமர்சனம்

அண்மையில் படித்த ராஜம் கிருஷ்ணனின் "புதிய சிறகுகள்" சிறுகதையை உங்களிடையே பகிர்ந்து கொள்ளத் தூண்டியது.
இரு தலைமுறைப் பெண்களின் வாழ்வியல் கோட்பாடுகளை அருமையாகச் சொல்லும் கதை.கடந்த தலைமுறை தாயான அபிராமியின் வாழ்வியல் அணுகுமுறைகள்,மகன் மீதான பாசம்,சமுதாயத்தின் சொல்லுக்கு அஞ்சும் பயம் போன்றவையும்,இத்தலைமுறைப் பெண்ணான சுபாவின் தெளிவான எண்ணங்கள்,செயல்கள்,முடிவெடுக்கும் பாங்கு போன்றவை அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.அடுத்தவர் வாழ்க்கையில் அவல் தேடும் சுற்றுப்புற மக்கள்,அதே மக்கள் அவசர காலங்களில் செய்யும் உதவி இவையெல்லாம் ஒரு நடுத்தர குடும்ப வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.குடும்ப மானத்தைக் காப்பதாய் நினைத்து செய்யும் சில செயல்கள் வாழ்க்கையையே தடம் புரள வைக்கும் என்ப‌தும்,தேவைப்பட்டால் வெட்டி விடவும்,வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக இருக்க வேண்டும் என்பதை திண்ணமாக உணர்த்துகிறது கதை.கதை சொல்லப்பட்ட பாங்கு காட்சிகளை கண்முன் விரிக்கிறது.இதே போன்ற குணநலன் கொண்ட நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மக்கள் நம்மை அறியாமலேயே கதைக்குள் வந்து அமர்ந்து கொள்கிறன்றனர். ‌கதையின் இறுதியிலாவது சீனி திருந்த மாட்டானா என்ற எதிர்பார்ப்பை வளர்த்திக்க் கொண்டே இருக்கிறது.ஆனால் அத்தகைய முடிவு இருந்தால் அது சினிமாத்தனமானதாகத் தான் இருந்திருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.தகுதிக்கும் மீறி குருட்டுச் செல்லமாய் வளர்க்கப்படும் பிள்ளைகள் எக்காலத்திலும் திருந்துவதில்லை என்பதை புடம் போட்டு விளக்குகிறது.அருமையான கதை.

கதையைப் படிக்க வேண்டுமா. இங்கே கிளிக் பண்ணுங்க‌

Friday, November 5, 2010

சந்தேகம்ஸ்

தீபாவளி சந்தேகங்கள்
1.தீபாவளியே கொண்டாடாமல் பட்டாசு எல்லாம் காசக் கரியாக்கற வேலைன்னு சீன் போடறவங்க கூட தலை தீபாவளின்னா பட்டாசு மத்தாப்புன்னு மணிக்கணக்குல கொளுத்தறாங்களே.மாமனார் காசுங்கிற மெதப்பா இல்ல மனைவி முன்னாடி காட்டற கெத்தா?

2.தீபாவளிக்கு அளவில்லாமல் பட்சணங்களையும் சாப்டுட்டு,அது ஜீரணமாக லேகியத்தையும் சாப்பிட‌றது நல்ல பழக்கமா கெட்ட பழக்கமா?

3.தீபாவளிக்கு மொபைல் கம்பெனிகாரன் சார்ஜ் பண்ணாலும் பரவாயில்லைன்னு எஸ்.எம்.எஸ் அனுப்பி வாழ்த்தற உறவுகள்,மீதி நாள்ல ஃப்ரீ எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப மாட்டேங்கறாங்களே? விஷ்  பண்றதும் பேஷன் ஆயிடுச்சோ?

வருக! வணக்கம்!!நல்வரவு!!!


இசைஎன்பது எக்காலத்திலும் அனைவரின் விருப்பத்திற்குரியதொன்று.அதே போல் இந்த இசையின் எண்ணங்களும் அனைவரின் விருப்பத்திற்கும் உரியதாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் உங்களிடையே இனித் தென்றலாய்த் தவழ முயல்கிறாள் இந்தக் கவின் இசை.